Sunday, November 06, 2005

பெக்கீட் அண்ட் அடீலா

பெக்கீட் அண்ட் அடீலா

ஈத் அன்று இரவு எகிப்து நாட்டிலிருந்து ஒளிபரப்பப்படும் நைல் தொலைக்காட்சியில் Bhekeet and Adeelaa திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது (sub-titles ஆங்கிலத்தில் இருந்ததால் நன்கு இரசிக்க இயன்றது)

வில்லன் (எதனால் அவர் வில்லன் என்று கேட்டால் நீங்கள் இன்னும் பல திரைப் படங்களைப் பார்க்க வேண்டும் என்றுதான் கூறுவேன்) தன் குழுவினருடன் நள்ளிரவில் ஒரு காரில் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் பாழடைந்த கட்டிடத்திற்கு அருகில் வருகிறார். எதிரில் இன்னொரு குழுவினர் (அவர்களும் வில்லன்களா என்று வில்லங்கமான கேள்வி கேட்கக்கூடாது. அவர்களைப்பற்றி அதிகம் எழுதத் தேவை இல்லை. அவர்கள் ஒருமுறைதான் வருகிறார்கள்) இரு குழுவினரும் காரின் விளக்குகளை அணைத்து ஏற்றி அணைத்து ஏற்றி அணைத்து ஏற்றி அணைத்து சரியான பார்ட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு இரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவர் பெரிய பெட்டியுடன் சென்று பெட்டியை மாற்றிக் கொண்டு திரும்பித் தத்தம் காருக்குச் செல்கின்றனர். முன்னமே திட்டமிட்டிருந்தபடி வில்லன் "போட்டுத் தாக்கு" என்று சத்தமாக உத்தரவிட, அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் ஒளிந்திருந்த (வில்லனின்) இன்னொரு குழு எதிரிகள் எல்லோரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறது.

வில்லன் எதிரிகளின் பெட்டியிலிருந்த அமெரிக்க டாலர் பணக்கட்டுகள் எல்லாவற்றையும், தான் கொண்டு வந்திருந்த பெட்டியிலேயே போட்டுக் கொண்டு (அதில் என்ன இருக்கிறது என்று பிறகுதான் சொல்வேன். அதற்குள் நீங்களே ஊகித்துவிட்டால், நீங்கள் அதிகம் ஆங்கிலக் குற்றவியல் கதைகள் படிப்பவர் அல்லது ஆங்கிலக் குற்றவியல் திரைப்படம் பார்ப்பவர் என்று அர்த்தம்) இரயில் நிலையம் சென்று விரைவு வண்டியில் பயணிக்கிறார். (அவர் ஏன் தன் காரிலேயே செல்லவில்லை என்றெல்லாம் கேட்கக் கூடாது. பிறகு எப்படித் திரை நாயகன், நாயகியைக் கதையில் கொண்டு வருவது? :-))

அதே இரயிலில்தான் ஒரே ஊரில் (அலெக்சாண்டிரியா) வெவ்வேறு இடங்களில் வாழும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத நாயகன் பெக்கீட்டும் (வானொலிப் பெட்டிகளின் பழுது நீக்குபவர்) நாயகி அடீலாவும் பயுணம் செய்கின்றனர். சிறு வாக்குவாதத்தில் ஆரம்பித்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவு சண்டை நீடிக்கிறது. இறங்குமிடத்தில் காவல் துறையினர் வில்லனுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர் (அந்த இரயிலில் வில்லன் வருவார் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்கக் கூடாது). காவலர்களைப் பார்த்த வில்லன் உடனே தன் பெட்டியை பெக்கீட் அடீலா இருவரின் உடமைகளுடன் சேர்த்து வைத்துவிடுகிரார். செலவு குறையும் என்று பெக்கீட்டும் அடீலாவும் ஒரே போர்ட்டர் (வில்லன் அந்தப் போர்ட்டரை நினைவில் வைத்துக்கொள்கிறார்.) மூலம் ஒரே டாக்சியில் பயணம் செய்கின்றனர். பெக்கீட் முதலில் இறங்கிக் கொள்கிறார். அடீலா அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்காமலே அது பெக்கீட்டுக்குச் சொந்தமானது என்று நினைத்துக் கொள்கிறார்.

அடீலா மறுநாள் பெக்கீட் இறங்கிய இடத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு பெக்கீட் இல்லம் வந்து அந்தப் பெட்டியை அவரிடம் கொடுக்க முயல்கிறார். பெக்கீட்டொ அந்தப் பெட்டி தன்னுடையதும் இல்லை என்று சொல்கிறார். சரி பெட்டியில் என்னதான் இருக்கிறது அதிலிருந்து பெட்டியின் உரிமையாளரைக் கண்டு பிடிக்க இயலுமா என்று கம்பி மூலம் அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள் இருவரும். பெட்டி முழுவதும் அமெரிக்க டாலர் நோட்டுகள் கட்டுக் கட்டாய் இருக்கின்றன. அவ்வளவு பணத்தை வாழ்நாளில் எண்ணிப்(pun intended) பார்க்கும் வாய்ப்பே இல்லாத அவர்கள் இருவருக்கும் மயக்கம் வராத குறைதான்.

கை விரல்கள் வலிக்கின்றன. அடுத்த பகுதியை நாளை எழுதுகிறேன்.:-))

1 comment:

ரவி said...

அடுத்த பகுதிக்காக காத்திருக்கும் வாசகர் எண் 1 << தாய்லாந்திலிருந்து >>